Saturday 7 October 2017

தமிழ்:1 அசோகர்

சிறுவர்களுக்கு வையவன் என்ற இந்த பிளாக்  தமிழ் மற்றும் English என  இரு மொழிகளிலும் வெளிவரும்.அன்பு வாசக நேயர்கள் ஏற்று வாசிக்க வேண்டுகிறேன். 
1 அசோகர்
      அது ஒரு யுத்த பூமி, ஆனால் போர் நடக்கவில்லை. நடந்து முடிந்து விட்டிருந்தது. நடந்த போரோ மாபெரும் போர். நிறைய உயிர்ச் சேதம்.
      அங்கே ஆயிரக்கணக்கானவரின் தலைகளும் உடல்களும் கைகளும் கிடந்தன. வெட்டியெறிந்த விறகுத் துண்டங்களை போல்! யுத்தகளம் எங்கும் அவை இரைந்திருந்தன
      ஒரு புறம் குற்றுயிராகத் துடிப்போரின் மரண ஓலங்கள்.
      மறுபுறம் உயிரிழந்தவர் தம் உடலைத் தேடுவோர் ஓலம் தம் தந்தை, மகன், கணவன் எங்கே? தேடிக் காண வந்திருக்கும் உறவினரின் துயரக்கூக்குரல்.
      ஆங்காங்கே ரத்தம் குட்டை குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. நாற்றம் தாங்க முடியவில்லை. பிணம் தின்னிக் கழுகுகள் வட்டமிட்டன.
      அந்த அவலக் காட்சியை நிதானமாகப் பார்த்தவாறே ரணகளத்தின் மத்தியில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்.
      அந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற மன்னன் அவன். ஆம், அவன்தான் அசோகச் சக்கரவர்த்தி.
      பிம்பிசாரனுக்குப் பின் மகதநாட்டை நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தவன்.
      தனது கலிங்க வெற்றியை நிலைநாட்டி ஆயிற்று. அதற்கு என்ன விலை தந்திருக்கிறோம்? நேரில் காண அவன் யுத்த பூமியை வலம் வந்து கொண்டிருந்தான்.
      தலையோ, துதிக்கையோ பிளந்து கொண்ட யானைகள் ஒருபுறம்! முழங்கால் வெட்டுப்பட்டுத் துடிதுடிக்கும் குதிரைகள் ஒருபுறம்.
      அவற்றைப் பார்த்துக்கொண்டே அவன் மெதுவாக மேலே நடந்தான். எல்லாக் கண்களும் அவனையே பார்த்தன.
      போர்க்களத்தில் சாய்ந்து கிடந்த மனித விழிகள், மிருகங்களின் விழிகள் எல்லாவற்றிலும் ஒரு மௌனமாக கேள்விக்குறி.
      ‘நாங்கள் உனக்கு என்ன தீங்கு செய்தோம்? நீ ஏன் எங்களை இப்படிச் சித்திரவதைக்கு ஆளாக்கினாய்?‘.
2
அவை மௌனமாக அவனைக் கேட்டன.
      யுத்த களத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த அசோகன் நின்றான். அவன் இதயத்தில் துன்பத்தின் இடிமுழக்கம் எழுந்தது. மின்னல் போல் அங்கே ஓர் உண்மை ஒளிவீசிப் பளிச்சிட்டது.
      ‘இது தானா நான் கண்ட வெற்றி? நான் பெற்ற இந்த வெற்றிக்கு இத்தனை உயிர்கள் பலியாக வேண்டுமா? இந்த விலை கொடுத்து ஒரு வெற்றியை வாங்கினேனே! நான் எவ்வளவு பெரிய ஈவிரக்கமற்ற அரக்கன்!‘
      அசோகன் தனக்குள்ளே மாய்ந்து மாய்ந்து மருகினான். துடித்துத் துடித்துத் தத்தளித்தான்.
      சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தான்.
      தனக்குள் அழியாத சபதம் ஒன்றைச் செய்து கொண்டான்.
      அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம்.
      உலகம் தோன்றியதில் இருந்து, அதுவரையோ, அதற்குப் பின் இன்று வரையோ______
      எந்த மன்னனோ ஆட்சியாளனோ செய்து அறியாத சபதம் அது!
      ‘இனி மிஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் போரின் பெயராலோ அல்லது வேறு எதன் பெயராலோ மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ நான் ஒரு தீங்கும் செய்யமாட்டேன். ஒரு வெற்றி பெற்ற எந்த மன்னனும் செய்திராத சபதம் அது.
      இத்தனை உயிர்களைக் குடித்து முடித்தற்கு பெருமைப் படுவார்கள் சிலர். கொண்டாடுவார்கள். அதற்குப் பதில் உருகி மன்னன் மனம் மாறிச் செய்த புது சபதம் அது.
      தன் மனமாற்றத்தின் வெளியீடாக புத்த மதத்தைத் தழுவினார் அசோகர்.     தான் செய்த சபதத்தை வாழ்நாளின் இறுதிவரை காப்பாற்றினார்.
அதுமட்டுமல்ல. உலகில் எந்த நாட்டிலும் எந்த மன்னனும் அதுவரை செய்யாத புதுமை ஒன்றையும் செய்தார்.
3
விலங்குகளுக்காகவே மருத்துவ சாலைகளை நாடெங்கிலும் நிறுவினார்.
பறவைகளுக்குச் சரணாலயம் அமைத்தார்.
அவரது ஆட்சியின் இருபதாவது ஆண்டு வந்தது. கோழிச் சண்டை, செம்மறியாட்டுச் சண்டை, எருதுச் சண்டை என்று பல போட்டிகள் இருந்தன. விலங்குகளைத் துன்புறுத்தும் அவை போன்ற பந்தயங்களைத் தடை செய்து ஆணைகள் பிறப்பித்தார்.
அவற்றில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை அறிவிக்கும் அவரது ஆணைகள் கல் கம்பங்களில் பொறிக்கப்பட்டன.
மிருகங்களை மனிதர்களுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்ற கருத்து அக்கால மக்களுக்குப் புதியது.
அதை அவர்கள் எளிதில் ஏற்கவில்லை. எனினும் அசோகர் மிகவும் உறுதியாக முயன்றார். அச்சரத்தை சட்டமாக்கினார்.
அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் மக்கள் மட்டும் அல்ல மிருகங்களும் பறவைகளும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாவும் இருந்தன.
அசோகனின் சாசனங்களில் அவர் பெயர்பிரியதர்சாஎன்று பொறிக்கப்பட்டுள்ளது. எல்லா உயிர்களின் மீதும் பிரியமான கவனிப்பு உடையவர் என்று அதற்குப் பொருள்.

அத்தகைய மகோன்னத மன்னன் ஆண்ட பெருமையுடையது நம்நாடு.

No comments:

Post a Comment